Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Sourashtra Lang. Comparative study

ஆய்வுக்கட்டுரை:

 

ஸெளராஷ்ட்ர மொழி ஒப்பியல்

எஸ்.டி.ஞானேஸ்வரன்

 

(இக்கட்டுரை 1978 மொதிரெத்து பத்திரிகை தீபாவளி மலரில் வெளியானது. இன்றைய தலைமுறையினர் நினைவில் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இதனை மறுபிரசுரம் செய்துள்ளோம். –ஆசிரியர்)

முன்னுரை: 

மொழியியல் என்பது மொழியின் வரலாற்றை விளக்குவதோடு நில்லாது அம்மொழியின் நிகழ்கால நிலையைத் தெளிவாக்கி எதிர்கால போக்கையும் அறிவிக்கவல்லது என்று டாக்டர் மு. வரதராசனார் கூறிய தன்மையிலிருந்து மொழி ஆய்வு எத்தகைய வகையில் இன்றியமையாதது என்பது புலனாகும். ஒரு மொழியின் ஆய்வினை தொடங்கிவிட்டாலே அம்மொழியின் வளர்ச்சி – வளர வேண்டிய முறை – மக்களின் அன்றாட பேச்சு வழக்கு பிறமொழிகளோடு ஒப்புநோக்கு போன்றவை பற்றியெல்லாம் எழுதும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஓப்புநோக்கு என்பது ஒரு கடினமான பணி. இந்நிலையில் நமது ஸெளராஷ்ட்ர மொழியினை திராவிட மொழிக் குடும்பங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழோடு ஒப்புநோக்கிக் காட்டி தமிழ்மொழிக்கும் ஸெளராஷ்ட்ர மொழிக்கும் இடையே உள்ள நெருக்கத்தை ஆராய முற்பட்டேன். தமிழ் மொழியில் அமைந்துள்ள ஒலியன் முறை, விட்டிசைத் தடுப்பு(உடம்படு மெய்) போன்றவை அமைந்துள்ள முறையிலேயே ஸெளராஷ்ட்ர மொழியிலும் அமைந்துள்ளது என்பதை தக்க உதாரணங்கள் காட்டி இக்கட்டுரை விளக்கிச் செல்லும். 

 

லியன் (Phoneme):

வ்வொரு மொழிக்கும் அடிப்படையாக அமைவது ஒலிகளே. மனிதனுடைய வாயிலிருந்து பிறக்கும் அத்தனை ஒலிகளும் மொழிக்குப் பயன்படாது. குறிப்பிட்ட சில ஒலிகளே மொழிக்குப் பயன்படும்.


வ்வொரு மொழியின் அடிப்படையான ஒலிகளுக்கு  அதாவது முதல் ஒலிகளுக்குத் தான் ஒலியன் என்று பெயர். இதனை இன்னும் சற்று விளக்கமாக இப்படிக் கூறலாம். “ஒரு மொழியில் பொருளை வேறுபடுத்தும் வகையில் அமையும் ஒலி தான் ஒலியன் எனப்படும்”.


தமிழ் மொழியில் ஒலியன்கள் அமைந்தவாற்றைக் காண்போம். பல், கல் என்னும் இரண்டுச் சொற்களில் பொருளை வேறுபடுத்திக் காட்டும் ஒலிகள் ப், க் எனவே இவை ஒலியன்கள். எவ்வாறெனின் ப்அல், க்அல் என்பதில் அல் என்னும் ஒலி இரண்டு சொற்களிலும் காணப்படுகிறது. பொருளை வேறுப்படுத்திக்காட்டும் விதத்தில் அமையும் ஒலிகளான ப், க் என்னும் ஒலிகளையே ஒலியன் என்கிறோம்.


இம்முறையிலேயே ஸெளராஷ்ட்ர மொழியிலும் ஒலியன்கள் அமைந்துள்ளன. அவற்றை இங்கு தக்க உதாரணத்துடன் காண்போம்.

கால்(க்ஆல்) – சால்(ச்ஆல்)

என்னும் இவ்விரண்டு சொற்களும் முறையே நேற்று, நட என்று பொருள்படும். ஆல் என்னும் ஒலி இரண்டு சொற்களிலும் காணப்படுகிறது. பொருளை வேறுபடுத்திக் காட்டும்வகையில் அமைந்த ஒலிகள் க், ச் என்பதே. எனவே இச்சொற்களில் உள்ள க், ச் ஒலியன்களாகும்.

 

தேப் போல

1) ஆளி (ஆள்இ) – பள்ளம்

    ஆனி (ஆன்இ) – கொண்டுவா


2) த4மி (த்4மி) - ஓடி

    தா4மி (த்4மி) – ஓடு (Run)


3) ஈமு (ஈம்உ) – விதை

    ஈகு3 (ஈக்3உ) – கல்வி


4) ஸிங்கு3 (ஸ்இங்க்3உ) – கொம்பு

    ஹிங்கு3 (ஹ்இங்3உ) – பெருங்காயம் அல்லது ஏறு


5) ஸம்பு3 (ஸ்அம்ப்3உ) – சாஸ்திரம்

    லம்பு3 (ல்அம்ப்3உ) – நீளம்


என்னும் சொற்களில் அடைப்புக்குள் பெரிய எழுத்துக்ளிலுள்ள ஒலிகள் யாவும் ஒலியன்களே. 

 

ஸெளராஷ்ட்ர மொழியிலிருக்கும் உயிர் ஒலியன்கள் அ ஆ இ ஒ. வடமொழிக் குடும்பங்களுள் ஒன்றான ஸெளராஷ்ட்ர மொழியிலும் அம்மொழி பேசுவோரின் தன்மைக்கேற்ப நான்கு முறைகளில் வெடியின ஒலிகளான க ச ட த ப ஒலிக்கப் படுகிறது. அதாவது உயிர்மெய்களுக்கு நான்கு ஒலிகள் உள்ளன. உதாரணம்:

ka kah ga gah - க2 க3 க4

c cha ja jha - ச2 ச3 ச4

ta tah da dah - ட2 ட3 ட4

Ta Tah Da Dah - த2 த3 த4

pa pah ba bah - ப2 ப3 ப4

 

இன்றைய தமிழில் ககரத்திற்கு மூன்று ஒலிகள் உள்ளன.  

அவை –

கடல் - k

அகம் - h

தங்கம் - g

இதைப் போல –

ச் - c, s. j

ப் - P, B, F

ட் - t, d

த் - T, D

என்று வல்லின ஒலிகளுக்கு மெல்லின ஒலிகளும் வழக்கில் உள்ளன. ஆனால் அவைகள் ஒலியன்களாக பெரும்பாலும் ஒலிக்கப்படுவதில்லை. சிறுபான்மையே ஒலிக்கப்படுகிறது.

உதாரணம்: ஒரு பலம் - மிகுந்த பலம்

இவற்றிலுள்ள பகரத்திற்கு இரண்டு ஒலிகள் உண்டு. இவற்றில் ஒலிக்கின்ற தன்மையே பொருளை வேறுப்படுத்திக் காட்டுகிறது.


ஸெளராஷ்ட்ர மொழியில் இவ்வித ஒலிப்புமுறை பெருவாரியாக அமைந்துள்ளதே தனிச்சிறப்பாகும். ஒரே சொற்களை அடுக்கிக்கொண்டே சென்று ஒலிக்கும் தன்மையினால் பொருளை வேறுப்படுத்திக் காட்டும். இம்முறை ஸெளராஷ்ட்ர மொழிக்கேயுள்ள தனித்தன்மையாகும். ஸெளராஷ்ட்ர மொழியில் பேசப்படுகின்ற அத்தனை ஒலிக்கும் வரி வடிவம் உண்டு என்பது மேலும் சிறப்பாகும். உதாரணத்திற்கு சிலவற்றைக் காண்போம்.


“காய் காய் காய்?” என்பதிலுள்ள மூன்று சொற்களும் ஒரே சொற்களாக இருப்பினும் ஒலிக்கும் முறையால் (கா3ய் காய் கா2ய்? – gai kai kahi?) பசு என்ன சாப்பிடும்? என்ற பொருளைத் தருகிறது.


“பொள்ளொ கடி கடி கா2” என்பதில் இரண்டு கடி என்னும் சொல் வந்துள்ளது. இதில் ஒன்று க2டி3 (kahdi) என்றும் மற்றொன்று கடி3 (kadi) என்றும் ஒலிக்கும்போது பழத்தை அறுத்து உண் என்ற பொருளைத் தருகிறது. 


இவ்வாறு வாக்கியங்களாக அமைந்து ஒலிப்புமுறையால் பொருள் வேறுபாட்டை உணர்த்தும் ஒலியன்களும் உள்ளன. அதே வேளையில் தனித்தனி ஒரே சொற்களுக்கு ஒலிப்பு முறையால் பொருள் வேறுபாடு உணரத்தக்க ஒலியன்களும் உள்ளன.

(எ-டு): தேவு – தேவு

          கடி – கடி – கடி – கடி 

இவற்றில் முதல் எடுத்துக்காட்டை தே2வு என்று ஒலிக்கும்போது பட்டறை என்ற பொருளையும் தே3வு என்று ஒலிக்கும்போது கடவுள் என்ற பொருளையும் தருகிறது.


இரண்டாவது எடுத்துக்காட்டில் க2டி3 என்று ஒலிக்கும் போது வாங்கி என்றும் க3டி3 என்றொலிக்கும் போது புதைத்து என்றும் க4டி3 என்று ஒலிக்கும்போது தொண்டை என்றும் க4டி என்று ஒலிக்கும்போது கிண்டி என்றும் பொருள் தருகிறது.


எனவே ஸெளராஷ்ட்ர மொழியில் இருவித ஒலியன்கள் உண்டு என்பதை நன்கு அறியலாம். சிலேடையில் கவிதைகள் எழுத வடமொழியிலேயே ஸெளராஷ்ட்ர மொழிக்கே தனிச் சிறப்பு என்பதை இதன் மூலம் நன்கறியலாம். 

 

விட்டிசைத்தடுப்பு (Prevention of hiatus):

 

உயிரில் முடியும் சொல்லும் உயிரில் தொடங்கும் சொல்லும் இணையும்போது நிலை மொழி உயிருக்கும் வருமொழி உயிருக்கும் இடையே ஏற்படும் தடை விட்டிசை எனப்படும்.


தமிழில் இது மிகச்சில சொற்களில் மட்டுமேயுள்ளது. பரு + அரை > பராரை என்று சிறுபான்மையும் சில + அணி > சிலவணி என்று பெரும்பான்மையும் ஒலிக்கப்படுகிறது.


தமிழில் விட்டிசைக்கும்போது ஒலிக்கும் எளிமைக்காக உயிரோடு ஒத்த இனமாகிய யகரமோ வகரமோ சேர்ந்து ஒலித்தல் வழக்கம். இந்த யகரம் அல்லது வகரத்திற்கு உடம்படுமெய் என்று பெயர். இந்த யகரமும் வகரமும் எந்தெந்த இடங்களில் வரும் என்பதை நன்னூலார் எழுத்ததிகாரத்தில் இயம்பியுள்ளார்.

பல + அரசர் >  பலவரசர்

மணி + அழகு > மணியழகு 

என்பவை இவ்விதிகளுக்குட்பட்டவை.


ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வாறு ஓருயிர் அடுத்து வரும் உயிரோடு இணைந்து ஒன்றுபடல் உண்டு. ஆங்கிலத்தில் ஒன்றனுயிர் கெட ஈற்று உயிர்க்கு தொடர்பான வேறொரு உயிர் தோன்றும். 

(எ-டு): Die + ing > Dying.

இதில் ie என்னும் உயிர் i என்னும் உயிரோடு இணைந்து அதற்கு தொடர்பான y தோன்றியுள்ளது.


வடமொழியிலும் இம்முறை காணப்படுகிறது. வடமொழியில் இம்முறையை தீர்க்கசந்தி, குணசந்தி என விரித்துக் கூறியுள்ளனர்.

(எ-டு): மட + அதிபதி > மடாதிபதி

                       நர + இந்திரன் > நரேந்திரன்

என்பதில் ஆகாரமும் ஏகாரமும் தோன்றியுள்ளது. இரண்டு அகர உயிர்கள் இணைந்து ஓருயிராக மாறியுள்ளது. மறறொன்றில் அகரமும் இகரமும் கெட ஏகாரம் தோன்றியுள்ளது. 

 

வடமொழிகளுள் ஒன்றான ஸெளராஷ்ட்ர மொழியிலும் விட்டிசைத் தடுக்கப்படும் முறையை ஆய்வோம். 

து3ஷ்ட + ஆத்மொ > து3ஷ்டாத்மொ

என்பதில் நிலைமொழி அகரமும் வருமொழி ஆகாரமும் இணைய நிலை மொழி அகரம் கெட வருமொழி ஆகாரம் நிலைமொழி மெய்யுடன் இணைந்து டகர ஆகாரமாய் தோன்றியுள்ளது.


இதைப்போலவே

ஹிங்கி3லி + அவய் > ஹிங்கி3லவய்

ஹாது + அட்சர் > ஹாதட்சர்

என்பவற்றில் இரண்டு உயிர்கள் இணையும்போது நிலை மொழி உயிர் கெட வருமொழி உயிருடன் நிலைமொழி மெய் இணைந்து ஒலிக்கப்படுவதைக் காணலாம்.


வடமொழியில் தீர்க்கசந்தி குணசந்தி என்பதுபோல வடமொழிகளுள் ஒன்றான ஸெளராஷ்ட்ர மொழியிலும் இம்முறை காணப்படுகிறது.

ஞான + ஈஸ்புரு > ஞானேஸ்புரு

என்பதில் நிலைமொழி அகரமும் வருமொழி ஈகாரமும் இணைய இரண்டும் கெட்டு ஏகாரம் தோன்றுகிறது. இதேப்போல

ராஜ + இந்த்3ரொ > ராஜேந்த்3ரொ 

என்று வரும். ஓலிக்கும் எளிமைக்கருதி இன்று இச்சொற்கள் இன்னும் சுருக்கமாக ஒலிக்கப்படுகிறது.

ஞான + ஈஸ்புரு > ஞானேஸ்புரு >  ஞனேஸ்புரு

ராஜ + இந்த்3ரொ > ராஜேந்த்3ரொ > ரஜேந்த்3ரொ

இம்முறையிலேயே இன்று நடைமுறையில் இன்னும் பலசொற்கள் எளிதாக்கி ஒலிக்கப்படுகிறது. 


முடிவுரை:

தமிழோடு ஸெளராஷ்ட்ர மொழி பல ஆண்டுகளாய் தொடர்பு கொண்டிருக்கின்றமையால் பல விதங்களிலும் தமிழோடு ஸெளராஷ்ட்ர மொழி ஒப்பாக உள்ளது. ஒப்பிலக்கண முறைப்படி நோக்கும்போது தமிழ்மொழிகளில் ஆய்வுசெய்யப்பட்ட ஒலியன், விட்டிசைத்தடுப்பு, ஒட்டுநிலை அமைப்பு, ஒலியசை முறை போன்றவைகளோடு ஸெளராஷ்ட்ர மொழி தமிழ் மொழியோடு ஒப்புமைக் காணப்படுவதால் தமிழுக்கும் ஸெளராஷ்ட்ர மொழிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிந்து கொள்ளலாம். ஸெளராஷ்ட்ர மொழி பேசுவோரிடையே தமிழ் மொழியும் கலந்து மிகச் சரளமாக ஒலிக்கப்படுவதற்கு இந்த ஒரு ஒற்றுமையே காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறேன்.


இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:

1) நவீன ஸெளராஷ்ட்ர பை2ல புஸ்தவு – T.M. இராமராய்

2) நவீன ஸெளராஷ்ட்ர பாலபோதினி

3) ஸெளராஷ்ட்ர ஸங்கீத ராமாயணம் - பாலகாண்டொ

4) மொழி நூல் - டாக்டர். மு. வரதராசனார்.

5) திராவிட மொழி ஒப்பியல் - டாக்டர். நா. செயராமன்

 

User Comments
vjkannan salem
nice
Information
Name
Comments
 
Verification Code
1 + 6 =