ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

Samooka Chinthanai-2

சமூகச் சிந்தனை: 2

 

இந்த இதழில் திருமண காலத்தில் ஆண் - பெண் - பெற்றோர் மனநிலை பற்றிக் காண முற்படும் முன்னர் ஒரு விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப் படவில்லை. ஸெளராஷ்ட்ர சமூகத்தில் நடைமுறையில் உள்ள சம்பிரதாயங்கள் அதன் வழி வரும் சடங்குகள் அதனோடு இணைந்த பழக்க வழக்கங்கள் யாவும் பொருளாதார அடிப்படையில் மாற்றம் காண முற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுகிறது. இது தொடர்பாக அவரவர்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பை எங்களுக்கு தெரியப்படுத்தினால் கருத்தின் சாரத்தை இக்கட்டுரையில் சேர்த்துக் கொண்டு எழுத முற்படுவேன். 


சமுதாயத்தில் சோரம் போன விஷயங்களில் சாரம் மட்டும் சுட்டிக்காட்டி மாற்றம் காண முயலுவது எத்துணை சாத்தியமாகும் என்பது தெரியாது. நல்லது எங்கிருந்தாலும் நமதாக்கிக் கொள்வோம். நல்லது அல்லாததை அறவே நீக்கிடுவோம். இது தான் எனது சமூகச் சிந்தனையின் நோக்கமாகும்.

 

திருமணக் காலத்தில் ஆணின் மனநிலை எப்படி இருக்கும்? 

 

உத்யோகம் புருஷ லட்சணம் என்பதற்கேற்ப வருமானம் செய்ய ஆரம்பித்த சில ஆண்டுகளில் பையனுக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்று பெற்றவர்கள் பேச்சை ஆரம்பிக்கின்றனர். ஆனால் அதற்கு முன்னரே ஆண்கள் தங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று தங்களுக்குள் ஒரு திட்டத்தை தீட்டிக் கொள்கின்றனர். அதாவது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நான் என்னுடைய குழந்தைகளிடமும் மற்றவர்களிடமும் சொல்வது ஒன்றே. முன்னேறியவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் முன்னேறவேண்டும். இதையே இன்றைய இளைஞர்கள் தங்களுக்குள் ஒருவரை ரோல் மாடலாக தெரிவு செய்துக் கொண்டு விடுகின்றனர். அதன்படி அவர்கள் முதலில் குடியிருப்புக்கு ஒரு பெரிய வீடாக வாங்க வேண்டும். வங்கிக் கணக்கில் எப்போதும் தேவைக்குப் பணமும் இருக்கவேண்டும். அதன்பின் தான் திருமணம் என்ற ஒரு கட்டுக்கோப்பில் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். 


ஜாதகம் பொருந்த வேண்டும். அதன்பின் பெண்ணைப் பிடிக்கவேண்டும். பெண்ணை பிடிக்க வேண்டும் என்றால்… அதற்கும் சில நிபந்தனைகள்…. பெண் சிவப்பாக – அழகாக – நல்ல குணவதியாக – அனைவரையும் அரவணைத்து செல்லும் பக்குவப்பட்டவளாக – படித்தவளாக அதுவும் தற்காலச் சூழ்நிலைக்கேற்ப (பொறியியல்) பட்டப்படிப்பு இளங்கலையோ முதுகலையோ அதுபோக நல்ல குடும்ப பின்னணியுடையவளாக இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இவை அனைத்தும் நியாயமானதே.

 

ஒரு சிலர் வசதி படைத்த பெண்ணாக இருந்தால் நிறமும் அழகும் குறைவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் மாறுகின்றனர். இது மனநிலையில் ஒரு மாற்றம். இப்படிப்பட்ட மனநிலைக்கு ஆட்படுபவர்கள் வாழ்க்கையில் பணம் ஒன்றைமட்டுமே குறியாகக் கொள்கின்றனர்.


திருமணம் முடிந்த கையோடு வெளிமாநிலம் வெளிநாடு என்று தேனிலவிற்கு செல்ல வேண்டும். மனைவியுடன் மகிழ்வோடு கைகோர்த்து ஊர் ஊராகச் சுற்றி வரவேண்டும். பார்க்கும் கண்கள் எல்லாம் ஜோடிபொருத்தம் பிரமாதம் என்று அங்காலாய்க்க வேண்டும். பின்னர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சொந்தமாக கார் போன்ற வாகனங்களைக் கொண்டு வசதியான முறையில் வாழ்க்கையை அமைத்து வாழவேண்டும் என்ற மனநிலையில் இன்றைய ஸெளராஷ்ட்ர இளைஞனின் வாழ்க்கை தொடர்கிறது.

 

திருமணக் காலத்தில் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? 

 

வினையே ஆடவர்க்கு உயிரே என்று சொன்னாலும் இன்றைய ஸெளராஷ்ட்ர சமூகத்தில் பெண்களும் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கி விட்டனர். எனவே பெண்களின் எதிர்ப்பார்ப்பு – அவர்களின் மனநிலை – உரிமை என்ற முறையில் தொடக்கம் காண்கிறது. ஒரு பெண்ணின் பெற்றோர்கள் ஜாதகம் பொருந்தி விட்டால் மாப்பிள்ளையை பெண்ணுக்குப் பிடித்து விட்டால் மற்ற விஷயங்கள் அனைத்தும் ஒத்துவந்து விட்டால் உடனே திருமண நிச்சயதார்த்தம். அதன் பின்னர் திருமணம் என்று ஏகமாய் நடக்கும். 


இடைப்பட்ட நாட்களில் அதாவது ஜாதகம் திருமணச் சந்தைக்குள் சென்று விட்டாலே பெண்களின் கனவு – அவர்களின் மனநிலை எப்படி இருக்குமென்று அறிய முற்படுவோம். திருமணச் சந்தை என்று நான் குறிப்பிடக் காரணம் இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் ஒரு வியாபாரம் என்றாகி விட்டத்தன்மையால்தான் சந்தை என்ற வார்த்தையைப் பிரயோகிக்க வேண்டியதானது. 


ஆண்களைப்போலவே பெண்களும் தங்களுக்கு அமையும் மாப்பிள்ளை நல்ல சிவப்பு நிறமாகவும் அழகனாகவும் தன்னை மட்டுமே நேசிப்பவனாகவும் தனக்காக எதையும் செய்யக்கூடிய முழுக்க முழுக்க திரைப்படத்தில் வரும் கதாநாயகனைப் போல இருக்க வேண்டும் என்று தங்கள் கனவை வளர்த்துக் கொள்கின்றனர். லகரத்தில் வருமானம் கொண்ட மாப்பிள்ளை திருமணத்திற்கு முன்னர் சொந்தமாக வீடு வாங்கியிருக்கவேண்டும் என்றும் எண்ணுகின்றனர். திருமணம் முடிந்த கையோடு தேனிலவு என்று உலகம் முழுவதும் சுற்றி வரவேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் அமைவது என்னவோ தங்களது பெற்றோர்களின் வருமானத்தில் அவர்கள் செய்யும் சீர், அணிவிக்கும் சவரன்களைப் பொருத்துதான் என்பதை பின்னாட்களில் அனுபவ ரீதியில் புரிந்து கொள்ளும்போது கனவுகள் கலைகின்றது. நிஜ வாழ்க்கை என்ன என்பதை உணர்கிறார்கள். 


பின்னர் இரண்டாவதுக் கட்ட மனநிலைக்கு மாறுகின்றனர். இது காலத்தின் கட்டாயம். நல்ல வசதியாக வாழ தானும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றும் தன்னுடைய வருமானத்தில் பெற்றோர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சேமிப்பை அதிகரித்து தனது திருமணத்திற்கு பெற்றோர்களுடன் கை கோர்த்து குடும்ப நிர்வாகம் என்ற சுமையை காணவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள். செலவுகளை சுருக்கி சேமிக்கும் பழக்கத்திற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டபின் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் ஆடம்பரம் என்பது தவிர்க்கப்படுகிறது. தனது ஆரம்பக் கால ஆசைகள் அங்கே புதைக்கப்படுகிறது. 


புகுந்த வீட்டில் மாமியார் மாமனார் நாத்தனார் ஆகியோரின் தொந்தரவுகள் இல்லாமல் வெளியூர் வாழ்க்கை அதுவும் தனிக்குடித்தனம். கணவனின் வருமானம் முழுமைக்கும் தானே சொந்தக்காரி என்ற பெருமையில் வாழவேண்டும் என்றும் சிலரின் மனோபாவம்.

 

நான் எப்படியெல்லாமோ வாழ நினைத்தேன். விதி என் வாழ்க்கையை இப்படி அமைத்துவிட்டது என்று விதியை நொந்து வாழும் பெண்களை நம் சமூகத்தில் இன்றைய தினம் பெரும்பான்மையாக காணமுடிகிறது.  பெற்றோர்களின் மனநிலை என்பது ஒவ்வொரு ஆண்-பெண் வாழ்க்கைக்கு மாற்று சக்தியாக உள்ளது. அதனை அடுத்த இதழில் காண்போம்.

 

User Comments

Question : 2
+
9=