ad1
askinAk nava orsu subha nanthinin

thErthal ...4

அன்புள்ள தம்பிக்கு…


உனது சகோதரன் ஆசீர்வாதம் செய்து எழுதுவது. நல்ல சிந்தனையுடன் நலமாக இருக்கிறேன். அதுபோல நீயும் இருக்க வேண்டுமென்று விரும்பி இக்கடிதம் எழுதுகிறேன். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. அதற்குள் நாம் யாருக்கு ஓட்டளிப்பது என்பதை தெளிவுப் படுத்தியே ஆகவேண்டும் என்பதில் நான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன். என்னுடைய கடிதத்தினை உன்னைப்போல நிறைய சகோதரர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை அறிகிறேன். 

நம்முடைய மதுரை தெற்குத் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி முதலில் ஒரு சிறு குறிப்பினை உன் முன் வைக்கிறேன். அதற்கு முன்னர் அரியணை ஏறுபவர்கள் யார் என்று எண்ணுகிறாய்? இதற்கு பதில் நமக்குத் தேவையில்லை என்றாலும் திமுக தவறினால் அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி வெற்றிப் பெற்று அரசு அமைக்கும். இந்த மாற்றம் தவிர வேறு எந்த ஒரு மாற்றமும் தமிழகத்தில் எதிர்ப்பார்க்க முடியாது. 

திமுகவை சேர்ந்த வேட்பாளர் மல்லிகை பாலச்சந்திரன் அமைதியானவர். குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரிடத்திலும் பாசமாக இருப்பார். தன்னை நம்பியவர்க்கு ஆதரவாக உதவிகரம் நீட்டுவார். லாட்டரி விற்பனையில் முதலிடம் வகித்தவர். பின்னர் ரியல்ஸ்டேட் தொழிலில் கால்பதித்தவர். ஆனால் பொதுவாழ்க்கையில் இவருடைய ஈடுபாடு குறைவுதான். சென்றமுறை இவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றியை நழுவ விட்டவர். இருந்தாலும் விடாமல் முயன்று திமுகவில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்குமேற்பட்ட உறுப்பினர்களோடு இணைந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை பெற்றவர்.

கட்சியில் மூத்தவர்கள் அனுபவசாலிகள் ஆகியோரது எதிர்ப்பு மேலிட உத்திரவால் அடக்கி வாசிக்கப்படுகிறது என்று அரசல்புரசலாக செய்திகள் வேறு. இதனால் கட்சி ஓட்டுக்களில் குறிப்பிட்ட சமுதாய மக்களின் ஓட்டுக்கள் மாறும் என்ற ஆதங்கம் மற்றொருபுறம். நமது சமூகத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் மிகவும் குறைவு. இதனால் கட்சி ஓட்டு சமூக ஓட்டு என்று பார்க்கின்றபோது இவரது வெற்றிக் கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை இவர் சட்டமன்ற உறுப்பினரானால் இவரால் தொகுதி மக்களுக்கு பல நல்ல சேவைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

அதிமுகவிலிருந்து அதிர்ஷ்டவசமாக வாய்ப்பினைப் பெற்றவர் சரவணன். இவர் சிவில் இன்ஜினியர். பல கட்டிட வேலைகள் மேற்கொண்டு வருகிறார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் உதவியுடன் ஸெளராஷ்ட்ர கூட்டுறவு வங்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று தலைவரானார். முன்னதாக இவர் மதுரை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது வார்டு மக்களுக்கு நல்ல பல சேவைகள் புரிந்து மக்கள் மனதில் நிற்கிறார். சமூக பொது நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்து கொண்டு மக்களிடையே அறிமுகமாகிக் கொண்டிருப்பவர். நல்ல முறையில் ஓடியாடி வேலைசெய்யக்கூடியவர்.

ஆனால் இவர் சார்ந்துள்ள கட்சியின் தலைமை நடந்து கொள்ளும் முறை இவரை சொந்தமாக கருத்துக்களை சொல்ல விடுமா என்று தெரியவில்லை. சர்வாதிகாரப் போக்கில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் இந்த கட்சியின் தலைமை ஏகமாக இலவசங்களை அறிவித்திருக்கிறது. திமுகவை தொடர்ந்து அதிமுகவும் இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்து மக்களிடம் இழந்த நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறது என்றே கொள்ளலாம்.

இந்தக் கட்சியிலும் மூத்த அரசியல்வாதிகள் அனுபவ மிக்கவர்கள் என்று விடுத்து ஸெளராஷ்ட்ர சமூகத்திற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற தலைமையின் கருத்தால் சரவணன் வேட்பாளராகியுள்ளார். இவர் வேட்பாளராவதற்கான உள்நோக்கம் பாரதிய ஜனதாவிலிருந்து மகாலட்சுமி வெற்றிப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே என்று கருத்தும் நிலவி வருகிறது. 

பாரதிய ஜனதா ஒரு தேசியக்கட்சி. இக்கட்சியின் மாநிலச் செயலாளர் மகாலட்சுமி. இவர் தெற்குத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே தெற்குத் தொகுதி வேட்பாளர் இவர்தான் என்று உறுதியாகிவிட்ட நிலையில் இவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். சுமார் பதினைந்து ஆண்டுகாலமாக சௌபாக்யா மகளிர் தொழில் முனைவோர் அமைப்பினை உருவாக்கி அதனை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்திச் செல்லும் மகாலட்சுமி ஸெளராஷ்ட்ர சமூகத்தின் அனைத்து அமைப்புகளிலும் பங்கேற்று சிறப்பாக பணியாற்றி வருபவர். சிறந்த பேச்சாற்றல் உடையவர். அரசுவேலையிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு சொந்த தொழில் செய்து வரும் தனது கணவருக்கு உதவியாக இருந்து தொழில் வளம் பெறச்செய்தவர். தன்னைச் சார்ந்த சமுதாயத்தில் பெண்கள் தொழில் புரியவும் உரிமம் பெறவும் வங்கிக்கடன் பெறவும் ஆலோசனைகள் வழங்கி கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட ஸெளராஷ்ட்ர மகளிர் தொழில் புரிய காரணமானவர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி என்று அனைத்து மொழிகளிலும் சரளமாக பேசும் திறனும் எழுதும் திறனும் கொண்டவர். பிரதமரை நேரில் சந்தித்து பேசிய பெண்மணி. கடமைக்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கக்கூடிய கம்பீரமான பெண்மணி. இவர் சட்டமன்ற உறுப்பினரானால் நம் சமூகப்பிரச்னைகள் சட்டமன்றத்தில் துணிவுடன் பேசி பெற்றுத்தருவார். மேலும் பிற சமூகத்தினராலும் கவரப்பட்ட இவர் தொகுதியில் அனைத்து மக்களுக்காக பணியாற்றும் தன்னுடைய பண்பினால் அனைத்து சமூக ஸ்தாபனங்களின் ஆதரவையும் பெற்றுள்ளார். 

திமுக-அதிமுக கட்சி ஓட்டுக்கள் என்று கணிக்கும்பட்சத்தில் பாஜகவின் கட்சி ஓட்டுகள் குறைவுதான். என்றாலும் நமது சமூக மக்களின் வாக்குகள் சமூக வேட்பாளர்களுக்கே என்ற பரந்த உள்ளம் மேலோங்குமானால் இவரது வெற்றியும் கேள்விக் குறியாகிவிடும். பிறகு யாருக்கு வெற்றி வாய்ப்பு போய்சேரும். நன்றாக யோசித்துப் பார்த்தால் உனக்கே புரியும். மக்கள் நலக் கூட்டணி என்று ஐந்து கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளார்கள். அதன் சார்பில் போட்டியிடும் பூமிநாதன். அவருடைய சமுதாய வாக்குகள் மற்றும் ஐந்து கட்சிகளின் வாக்குகள் என்று ஏகமாக பெற்று சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று விடுவாரோ என்ற அச்சம் எனக்குள் லேசாக தலை தூக்குகிறது. 

எனவேதான் சொல்கிறேன். நம் சமூக வாக்குகள் சமூக வேட்பாளர்களுக்கே. யாருக்கு யாரை பிடிக்குமோ அவர்களுக்கு வாக்களியுங்கள். எப்படியும் ஒரு ஸெளராஷ்ட்ரர் வந்துவிடுவார் என்று மனக்கோட்டை கட்டுவதை தவிர்த்து விடு தம்பி! மூன்று பேரில் ஒருவருக்கே ஆதரவு தந்து அவரையே மகத்தான வெற்றிப் பெறச்செய்ய வேண்டும். அதுதான் இப்போதைய நமது புத்திசாலிதனம். எந்தக்கட்சி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தாலும் அதனால் நமக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. ஏனென்றால் வெற்றிப் பெற்ற வேட்பாளருக்கு விழும் வாக்குகளின் எண்ணிக்கை நமது சமூகத்தின் பலத்தைக் காட்டிவிடும். 

எனவே இறுதியாக முடிவிற்கு வருகிறேன். மொத்தமுள்ள வாக்காளர்கள் 202000. இதில் ஸெளராஷ்ட்ரர்களின் வாக்குகள் சுமார் 70000. ஓவ்வொரு கட்சியிலும் கட்சி ஓட்டுக்கள் சுமார் 35000. வாக்களிப்போரின் எண்ணிக்கை 75 சதம் என்றால் கிட்டத்தட்ட 150000 வாக்குகள். இதில் வெற்றிப்பெறும் வேட்பாளர் கிட்டத்தட்ட 70ஆயிரம் முதல் 80ஆயிரம் வாக்குகளுக்குமேல் பெறவேண்டும் என்றால் கட்சிஓட்டு+அவரவர் சமுதாய ஓட்டு+பொதுமக்களின் ஓட்டு என்று விழுந்தால்தான் வெற்றிப்பெற இயலும். நம் சமூக மக்களின் வாக்குகள் நிச்சயமாக சிதறிப் போகும். அதனால் நாம் எளிதில் வெற்றிப் பெற்றுவிடலாம் என்ற மனக்கோட்டையில் உலாவருபவர்தான் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர். ஸெளராஷ்ட்ரர்களின் வாக்குகள் சிதறாமல் ஒருவருக்கே சென்றால் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளரை வெற்றி வாய்ப்பிலிருந்து விலக்கிவிடலாம். 

அப்படி என்றால் நமது வாக்கு யாருக்கு? பெண்மைக்கும் தாய்மைக்கும் முதலிடம் அளித்து வருவது தமிழகம் என்றால் தாயுள்ளம் ஒன்றே தலைமையேற்க தகுதியானது என்றால் அந்த கருத்திற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்று நமது ஆதரவினை அளிக்க தவறலாமோ?
சிறந்த கல்வியறிவு, தன்னுடைய பேச்சால் அனைவரையும் ஈர்க்கும் திறன், துரிதமாக செயல்படும் தன்மை, எடுத்த காரியத்தை முடித்தே ஆகவேண்டும் என்ற திடமான கொள்கையுடைய பாரதிய ஜனதா வேட்பாளர் மகாலட்சுமிக்கு தாமரை சின்னத்தில் நமது வாக்கினையளித்து மகத்தான வெற்றிப் பெறச் செய்வோம் என்ற உறுதியுடன் வாக்களிக்கச் செல் தம்பி! இதுதான் நீ நம் சமூகத்திற்கு செய்யும் மகத்தான பங்களிப்பாக இருக்கும். 

என்றும் உன்னை மறவாத அண்ணன்
சூரியா ஞானேஸ்வர்

 

User Comments

Question : 2
+
9=