ad1
askinAk nava orsu subha nanthinin

Samooka Chinthanai-7

சமூகச் சிந்தனை: 7

 

விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய சில பழக்கங்கள் ஆதிக்கத்தின் உச்சத்தால் எந்த அளவிற்கு குடும்பச் சூழ்நிலையை மாற்றுகிறது என்ற இந்த வரியை படித்தவர்கள் மனதில் என்னென்ன நிகழ்ச்சிகள் மனக்கண்முன் தோன்றி மறைந்திருக்கும்.

விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை என்று சொல்வார்கள். விட்டுக் கொடுத்துப் போனால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் அதுவும் பெண்கள் அதிகமாக விட்டுக் கொடுத்துப் போகவேண்டும் என்று அனுபவ ரீதியில் சொல்வார்கள். திருமணக் காலங்களில் ஆண் வீட்டாரிடம் சீர் செனத்தி பற்றி பேசும்போது கூட பெண் வீட்டார்கள் தான் அதிகமாக விட்டுக்கொடுத்து பேச வேண்டியதாகிறது. இதில் படித்த வேலைப் பார்க்கும் பெண்ணாக இருந்தாலும் கூட ஆண் விட்டார் கேட்கும் சவரன் சீர் என்ற இத்யாதிகள் கொடுத்துதான் திருமணம் முடிக்கவேண்டும் என்ற கட்டாயம். ஆண்களுக்கு பெண்கள் சரிநிகர் சமானம் என்று வாதத்திற்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாமே தவிர நடைமுறைக்கு சாத்தியமானதல்ல என்பதை பெண்கள் சமுதாயமே உறுதிப்படுத்துகிறது. அதாவது பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பது அனுபவ உண்மை. 


நாம் பையனைப் பெற்றவர்கள் இப்படித்தான் பேசுவோம். நீங்கள் பெண்ணைப் பெற்றவர்கள் அடக்கமாகத் தான் பேசவேண்டும் என்று எடுத்து எறிந்தாற்போல பேசும்போது ஒவ்வொரு பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கும் அடிவயிற்றிலிருந்து சூடு கிளம்பி உடல் முழுவதும் பரவும். பையனைப் பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? அவர்கள் கேட்கும் நகை சீர் போன்றவைகளுக்கு மணமகனுக்கு உடன்பாடு உண்டா இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே பெண் அமையவில்லை என்று தங்கள் மகனுக்கே நம்பிக்கை துரோகம் செய்யும் பெற்றோர்களின் மனநிலையில் சிறிது மாற்றத்தைக் காண முடிந்தால் போதும். பல ஆண்களுக்கு திருமணம் விரைவில் முடியும். ஆண்களின் திருமணங்கள் தள்ளிப்போவதற்கு முழுக்க முழுக்க காரணம் பெற்றோர்களின் வறட்டு கௌரவமும் வீண் பிடிவாதமும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத பண்பும் தேவையில்லாத உயர்ந்த மனப்பான்மை (Superiority complex) தான் காரணம் என்றால் அது மிகையாகாது. 


ஆயிரமாயிரம் கற்பனைகளோடு மணமுடித்துக்கொண்டு வரும் மணப்பெண், மாமனார் வீட்டிற்கு வந்ததும் அங்குள்ள பொறுப்புகள் கடமைகள் என்று தன் மீது சுமத்தப்படும் அத்தனை சுமைகளையும் சுமந்து மாமனார் மாமியார் மெச்சுகின்ற மருமகளாக தன்னை மாற்றிக்கொள்ள வாழ்க்கையில் எப்படியெல்லாம் போராடுகிறாள். எத்தனை தியாகங்களை செய்கிறாள். அவளைப் புரிந்து கொண்டு மதித்து கௌரவமாக நடத்தும்போது காலம் கடந்துவிடுகிறது. கடந்துவந்த பாதையை மறந்து அதே மருமகள் மாமியாராக மாறுகிறாள். தனக்கு மாமியார் செய்ததைப் போலவே தன் மகனை மணக்கும் பெண்ணை நடத்த சிறிது சிறிதாக மாறத் தொடங்குகிறாள். வாழ்க்கைச் சக்கரம் சுற்றுகிறது. இன்று உனக்கு நாளை எனக்கு என்று எண்ணுபவரே வாழ்க்கையில் உதாரணமாகத் தோன்றுகிறார்கள். 


திருமணம் செய்வது மகனும் மருமகளும் இனிமையான இல்லறம் கண்டு முறையான வம்ச விருத்திக்காகத்தான் என்பதை எத்தனை பெற்றோர்கள் புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். மகள் மருமகனுடன் மகிழ்ச்சியாக இருப்பதையும் அவளின் பேச்சுக்கு மறுப்பு ஏதும் கூறாமல் நடந்து கொள்ளும்படி மருமகன் மாறிவிட்டான் என்றபோதும் மகிழ்ச்சியில் மூழ்கிப்போகும் இவர்களால் மருமகளுடன் மகன் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண பொறுக்கவில்லை. மனைவி சொல்வதைக் கேட்டு நடந்துகொண்டால் பெண்டாட்டியின் பேச்சுக்கு ஆடுகிறான் என்று வசைப்பாட தொடங்கிவிடுவார்கள். ஏன் இந்த முரண்பாடு? இது சமுதாயத்தில் கண்டிப்பாக களையப்பட வேண்டிய மிக முக்கியமான செயல்பாடு. 


பெரும்பாலும் யாருமே மருமகளை மெச்சிக் கொள்வதில்லை. குற்றம் குறைகளை கண்டுபிடித்து அதனைச் சுட்டிக்காட்டி மனதைப் புண்படுத்தும் மாமியார்கள்தான் அதிகமாக காணமுடிகிறது. பெண் வீட்டார்கள் என்றால் இப்படித்தான் பேச வேண்டும் என்று வரன்முறை வைத்துள்ள சமுதாயம் ஆண் வீட்டார்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்றும் அதற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்ற நியதியையும் படைத்து விட்டது. இது காலத்தின் கட்டாயம். நாம் படித்திருக்கிறோம். நமக்கு சிந்திக்கத் தெரிகிறது. ஒருவரின் மனதைப் புண்படுத்தி  கஷ்டப் படுத்தும் அளவிற்கு சிந்திக்கத் தெரிந்த நமக்கு அடுத்தவரை மகிழ்விக்க சிந்திக்கத் தெரியவில்லை. இன்று நாம் பெண் வீட்டாரை சிரமப்படுத்தி சந்தோஷப்படுகிறோம். நாளை நமது பெண்ணை திருமணம் செய்யும்போது அப்படியே நம்மை திரும்ப சந்திக்கச் செய்யுமே என்ற எண்ணம் எந்த மணமகன் பெற்றோருக்கும் தோன்றுவதில்லை. 


போன இடத்தில் எங்கள் மகள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறாள். மாமனார் மாமியார் அவளை தங்கள் பெண் போல நடத்துகிறார்கள். எங்களுக்கு இனி எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லும் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்? என் பெண்ணையும் படிக்க வைத்தேன். அவளும் சம்பாதிக்கிறாள். ஆனால் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே இல்லை. மாமியாரால் ஒவ்வொரு பிரச்னைகள் தேடி வரும். நாத்தனார் இருந்தால் போதாகுறைக்கு அவளும் தன்னை யாரும் கவனிப்பதே இல்லை என்ற புலம்பல். என் பெண் ரொம்பவும் கஷ்டப்படுகிறாள். பணம் மட்டும் இல்லையென்றால் அவளை யாருமே மதிக்க மாட்டார்கள் என்று பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் கவலையால் புலம்பி புலம்பி மனஅழுத்தம் உண்டாகி உடல்நிலை பாதிக்கப்படுவதும் உண்டு. இதனை எல்லாம் கூர்ந்து கவனித்தாலும் தானுண்டு தன் வேலையுண்டு என்று மாப்பிள்ளை பையனும் வாய்பேசாது மௌனமாக இருந்து விடுவதால் பிரச்னைகள் பெரிதாகி பெண் வீட்டார் பக்கமோ மாமனார் மாமியார் பக்கமோ அதிகமாக தொடர்பு வைத்துக் கொள்ள முடியாமல் எந்தவித ஒட்டுதலின்றி வாழுகின்ற துர்பாக்கியசாலியாக வாழும் நிலை ஏற்படுகிறது. 


இது பொதுவாக நாம் காணுகின்ற நிலை. ஸெளராஷ்ட்ர  சமூகத்தில்  வருமானம் செய்யும் பெண்ணின் நிலை எப்படி இருக்கிறது என்று சற்று உன்னிப்பாக கவனித்தால் அது ஒரு பரிதாபக் கதையாகிறது. கைநிறைய சம்பாதிக்கிறார்கள். குழந்தைகளை பாசத்தோடு கவனித்துக் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஆதரவாக செயல்படுபவர்கள் யார்? அவர்கள் சம்பாதிக்கும் வருமானம் எங்கு போய் முடக்கப்படுகிறது? வேலைக்குப் போகும் பெண்ணால் கணவனையும் கணவனின் குடும்பத்தையும் தன்னைப் பெற்றவர்களின் குடும்பத்தையும் திருப்திப் படுத்தி மகிழ்ச்சியாக வாழ முடிகிறதா? இது போன்ற பிரச்னைகள் பற்றி அடுத்தச் சிந்தனையில் காண்போம்.

 

User Comments

நல்ல கருத்து.!நம்சமூக மக்கள் உணர்ந்து நடந்துகொண்டால் முன்னேற்றம் விரைவில் காணலாம்.!உணர்வர்களா.?! உணரவேண்டியவர்கள்.!?

கந்தாள்ளு.சுப்பிர
Question : 1
+
8=