CSR athama...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:
Vol.4 1st August 2017 Issue: 23
சி.எஸ்.ஆர். ஆத்மா சாந்தி அடையுமா?
மதுரை ஸெளராஷ்ட்ரக் கல்லூரி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிகின்ற நேரத்தில் காரியதரிசி காலமானதைத் தொடர்ந்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அது இப்போது எப்போது எப்படி நடக்கும் என்பது கேள்விக்குறி! அடுத்த சில நாட்களில் கல்லூரி நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுள்ளவர்களால் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இது சமயம் பார்த்து கல்லூரியில் நடக்கும் சில தவறுகள் ஸெளராஷ்ட்ரர் அல்லாதோர் பத்திரிகை ஒன்றில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. எல்லா தனியார் கல்லூரிகளில் நடைபெறும் தவறுகள்தான் இங்கும் நடந்துள்ளது. ஆனால் இந்த விலாசம் இல்லாத வாரஇதழில் செய்தி வெளியாவதற்கு காரணம் என்ன? அந்தப் பத்திரிகையைச் சார்ந்தவர்களில் யாருக்காவது கல்லூரி நிர்வாகம் ஒத்துழைப்பினை தந்திருக்காது. எனவே இவர்கள் தவறு அப்பட்டமாக அவர்கள் வெளியிட்டுள்ளனர். நம் சமூகப் பத்திரிகைகளையே கண்டுக் கொள்ளாத இவர்கள் வெளிப் பத்திரிகைகளுக்கு எந்த காலத்தில் முக்கியத்துவம் கொடுத்துவிடப் போகிறார்கள்?
சமூகப் பத்திரிகைகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை அனைவரும் இவர்களுக்கு சொல்லியாகி விட்டது. யாருடைய பேச்சினையும் கேட்பதில்லை என்ற முடிவிற்கு வந்தவர்களிடமிருந்து நிர்வாகத்தை பறிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இனி தேர்தல் அறிவிப்பதற்கு முன்னர் மீண்டும் முதலிலிருந்து நடவடிக்கைகள் தொடர வழி செய்யப்பட வேண்டும். அதாவது ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டும். உறுப்பினர்களுக்கான கட்டண உயர்வை ரத்து செய்து சாமான்யர்களும் உறுப்பினராகும் நிலைக்கு கட்டணத்தைக் குறைக்கவேண்டும். உறுப்பினர்களின் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படவேண்டும். நல்ல ஆரோக்கியமான போட்டியில் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு வர வேண்டும்.
புதிய நிர்வாகம் சமூக மாணவ-மாணவியர்க்கு நல்லமுறையி;ல் கல்வி சேவையை வழங்கவேண்டும். எவ்வித குறைபாடுகளுமின்றி செயல்பாடு விளங்கவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்கு அறவே மாறவேண்டும். தொழிலதிபர் சி.எஸ்.ஆர். அமர்ந்து நிர்வகித்த இடத்தில் அமர்வோர் சுயலாப நோக்கம் இல்லாதவர்களாக இருந்தால்தான் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக இருக்கும். மறைந்த அமரர் சி.எஸ்.ஆர். அவர்களின் ஆத்மா கல்லூரியைச் சுற்றிக் கொண்டுதானிருக்கும். அவர் விட்டுச்சென்ற பணியினை செம்மையாக நடத்திச் செல்ல முன்வந்தாலே போதும் அந்த ஆத்மாவிற்கு சாந்தி கிடைத்துவிடும்.